ஒருமுறை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மதுரையை ஆண்ட சோழந்தகன் என்னும் பாண்டிய மன்னன், ஆற்றைக் கடந்துச் சென்று சொக்கநாதரை வழிபட முடியாமல் போனாதால் வைகையின் கரையிலேயே ஆப்பு ஒன்றை ஸ்தாபித்து சிவபூஜை செய்தான். மன்னனின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான் அதில் தோன்றி காட்சிக் கொடுத்து அருளினார். அதனால் சுவாமிக்கு 'ஆப்புடையார்' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் 'திருவாப்புடையார்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். சதுர வடிவ ஆவுடை, சற்று பெரிய பாணம். இறைவனுக்கு 'இடபபுரேசர்' என்னும் திருநாமமும் உண்டு. முற்காலத்தில் இப்பகுதி 'இடபபுரம்' என்றும் அழைக்கப்பட்டது. சுவாமியைப் போலவே அம்பிகையும் சிறிய அழகிய வடிவத்துடன் 'சுகந்த குந்தளாம்பிகை' என்னும் திருநாமத்துடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பிகைக்கு 'குரவங்கமழ் குழலம்மை' என்ற பெயரும் உண்டு.
ஒருசமயம் அர்ச்சகர் ஒருவர் வைகை ஆற்று மணலை உலையில் இட்டு இறைவனின் கருணையினால் அதை அன்னமாக்கிக் காட்டினார். அதனால் சுவாமிக்கு 'அன்னவிநோதர்' என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலின் பிரகாரத்தில் கல்லினால் ஆன சுமார் 5 அடி உயரமுள்ள நடராஜர் - சிவகாமி அம்மன் சிலை, நந்திதேவர் மத்தளம் வாசிக்க, காரைக்கால் அம்மையார் கீழ் இருக்க, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் வணங்க அற்புதமாக உள்ளது. உற்சவ நடராஜப் பெருமான், சிவகாமி சிலைகளும் உண்டு.
வெளிப்பிரகாரத்தின் பின்புறம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். சுவாமி, அம்பாள், சுப்பிரமண்யர் மூவரும் கிழக்குத் திசை நோக்கி காட்சி தருவது சோமாஸ்கந்த மூர்த்தியை நமக்கு நினைவூட்டுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். கோயில் நடை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|